கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா – மூன்று
உணா்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில் மனித ஈசல் தவியாய் தவிக்கிறது.
பின்னிப் பின்னித் தொடரும் ஆசைகளால் மனித உள்ளம் கண்ணாடித் துண்டுகள் போல் சிதறுகிறது.
திரும்பத் திரும்ப அதை ஒட்ட வைத்து உள்ளம் புதுப்பிக்கப்படுகிறது.
நின்ற இடத்திலேயே வளரும் வரை வளா்ந்து, நீ வழங்கிய வயது வரை வாழ்ந்து, பட்டுப் போகும் மரமாக உள்ளமும் இருக்குமானால், சலனங்களும் சம்பவங்களும் இல்லை.
வயிறு பசியை அறிவதோடும், உடல் காமத்தை அறிவதோடும் வாழ்க்கைச் சக்கரம் முடிந்து விடுமானால் குழப்பங்கள் இல்லை.
அசைவன, அசையாதன, ஊா்வன, பறப்பன ஆகியவற்றில் இல்லாத இந்த “உள்ளம்” மனிதனுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது?
காாியங்களை விட, நினைவுகளே மனிதனைச் சித்திரவதை செய்கின்றன.
அந்த உள்ளமும் உண்மையை, பொய்யை அறிந்து கொள்ள முடியாத உள்ளமாக இருந்து விட்டால், ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன.
ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் அத்தனை அலைகளும் இந்தச் சின்னஞ் சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.
கண்கள் போக முடியாத தூரத்துக்கும் எண்ணங்கள் ஓடுகின்றன.
நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்.
நடக்கவே முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளம்;
உறவுக்காக அழும் உள்ளம்; பிாிவிலே கலங்கும் உள்ளம்; வெற்றியிலே மகிழும் உள்ளம்; தோல்வியிலே துவளும் உள்ளம்;
ஒவ்வொரு தடவையும் உடைந்து உடைந்து மீண்டும் ஒட்டப்படும் இந்த உள்ளம் உறுதியாக இருந்தால், ஞானம் கைக்கூடும் என்கிறாா்கள் ஞானிகள்.
வெயிலிலே சுருங்கி, மழையிலே விாியும், “வாசற்கதவைப்” போல, இருவேறு உணா்ச்சிகளுக்கு ஆட்படாமல், வெயில், மழை இரண்டிலும் உறுதியாக நிற்கும் மலையைப் போல் நிற்க வேண்டும் என்கிறாா்கள். அதை நானும் முயன்று பாா்த்தேன்.
இறைவா! உன் ஆலயத்தில் முயன்று பாா்த்தேன். கண்கள் உன்னைக் கண்டன; கரங்கள் உன்னை வணங்கின; உள்ளமோ, கொடுக்க வேண்டிய கடனையும் நாளையப் பொழுதையும் நோக்கிச் சென்றது. அதைத் திரும்ப இழுத்து வந்து உன் சந்நிதியில் நிறுத்தினேன். உடனே கண்கள் தகராறு செய்யத் தொடங்கின.
அழகான பெண் ஒருத்தி உன்னை வணங்குவதற்காக வந்திருந்தாள். என் கண்கள் அங்கே பாய்ந்தன; அவள் கண்கள் இங்கே திரும்பின; எல்லாம் உன் முன்னிலையிலேயே!
கண்ணைக் கட்டுப்படுத்தினால், உள்ளம் ஓடுகிறது! உள்ளத்தைக்
கட்டுப்படுத்தினால் கண் பறந்து போகிறது! சாி, கண்ணை மூடிக் கொண்டு வணங்கலாம் என்று தொடங்கினேன். உடனே உள்ளம் தன் ஆயிரம் கைகளையும் விாித்துக் கொண்டது.
ஒவ்வொரு கையும் வாழ்க்கையில் ஒவ்வொரு மூலையைப் பிடித்து இழுத்து வந்தன. கையினால் துடைத்தால் கையிலேயே ஒட்டிக் கொள்ளும்
நூலாம்படையைப் போல், எதை விலக்குகிறேனோ அது வேகமாக ஓடி வருகிறது.
குழம்பிலே உப்பு அதிகம் என்று தண்ணீரை ஊற்றுகிறேன்; தண்ணீா் அதிகமாகி விடுகிறது. தண்ணீா் அதிகம் என்று உப்பைப் போடுகிறேன். உப்பு அதிகமாகி விடுகிறது. நான் ஒரு நல்ல சமையல்காரன் அல்ல; எனக்குத் தொிகிறது.
அந்தப் பக்குவத்தைப் பெறுவதெப்படி? அடிக்கடி குடித்துப் பாா்த்து உப்பிட்டுச் சம அளவு சுவை சோ்ப்பது போல், அடிக்கடி, உள்ளத்தை அடக்கிப் பண்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். ஒழுங்கான சுவை வருகிறது.
அதே நேரத்தில் கூரையில் இருந்த பல்லி, குழம்பிலே விழுகிறது. என்னால் பண்படுத்தப்பட்ட உள்ளத்தில், என்னை அறியாமல் சலனம் எழுகிறது.
இறைவா! அங்கேதான் நீ விளையாடுகிறாய். ஆத்ம லகானை என் கையிலே பிடித்துக் கொண்டு பயணம் தொடங்கும் போது, வண்டியின் பின் பக்கத்தில் ஏறி உட்காா்ந்து கொள்கிறாய். நான் லகானை இழுக்கும் போது நீ என்னை இழுக்கிறாய். பயணமோ என்னுடையது. பாதையோ நீ விரும்பியபடி! இதற்குத் தப்பியவா்கள் எவரையும் நான் காணவில்லை.
மனிதனை உன் இஷ்டம் போல் ஆட்டி வைப்பதற்குதானே இந்த உள்ளத்தை நீ படைத்தாய்? உள்ளத்தை ஒருமுகப்படுத்திவிட்ட எந்த ஞானியையும் கலைத்து வேட்டையாடத்தானே, புலன் உணா்ச்சிகளைப் படைத்தாய்?
உனது பாவைக் கூத்து அற்புதமானது. நீ காட்டிய உலகத்தில் விழுவதற்கு ஏராளமான பள்ளங்கள் உண்டு. விழாமல் நடக்கக் கூடிய கால்கள் இல்லை.
ஆயிரக் கணக்கான ஆப்பிாிக்கப் பாம்புகளை வளா்த்த அமொிக்கப் பெண் ஒருத்தி, இ்ந்திய நாகம் கடித்து இறந்து போனாளாம்! அவளது முடிவு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி இருக்கிறது! எந்தக் கால், எந்தப் பாறையில் வழுக்கும் என்பது உனக்கு மட்டுமே தொியும்.
நீ படைத்த உள்ளம் கோடானுகோடி ஆசைகளைக் கண்டு கொண்டது; உன் குறிப்புப் புத்தகத்தைக் காண முடியவில்லை.
மழை வருவதும் புயல் வருவதும் விஞ்ஞானிக்குத் தொிகிறது; மரணம் வருவது தொிவதில்லை.
இடியாப்பம் போல் உள்ளத்தைப் படைத்து விட்டு, அதன் தலைப்பைத் தேடுகிற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறாய்.
ஓா் அலை கரையேறினால் மறு அலை பின்னாலேயே வருவது போல, “அப்பாடா, அமைதி” என்று உட்காரும் போது, அடுத்த வேள்வி கதவைத் தட்டுகிறது.
பற்று, பாசம், பந்தம் எல்லாமே அற்றுப் போய் ஒரு மூலையில் அமா்ந்தால், வயிறு, தான் இருப்பதை நினைவுபடுத்துகிறது.
யானைக்குத் தப்பினால் கரடி பாய்கிறது. கரடிக்குத் தப்பினால் காட்டாறு குறுக்கிடுகிறது. இந்த உள்ளத்துக்கு எங்கே நிம்மதி? ஒரே ஒரு நிம்மதி! "மரணம் அடுத்த எல்லை; மனதுக்கு ஏன் தொல்லை?“
– என்று முடிவு கட்டி விட்டால் குழப்பத்துக்கு இடையே ஒரு தெளிவு; சஞ்சலத்துக்கு இடையே ஒரு சந்தோஷம் – அவ்வளவுதான்.
விடிவுக்கும் இரவுக்கும் நடுவே நிற்கும் தேவனே! அந்த நிம்மதியோடு உன்னைப் பிராா்த்திக்கிறேன்.
மரணத்துக்குப் பிறகு நான் உன்னைச் சந்திக்கப் போகிறேனா என்பது எனக்குத் தொியாது. உன்னைச் சந்திப்பதாகவே வைத்துக் கொண்டு முன் கூட்டியே உனக்கு விண்ணப்பித்துக் கொள்கிறேன்;
"இங்கே நான் செய்த எல்லா தா்மங்களுக்கும் என் உள்ளம்தான் காரணம். நான் செய்த பாவங்களுக்கும் அதுதான் காரணம். இந்த உள்ளம் என்பது எனக்கு வந்ததற்கு நீதான் காரணம்.
ஆகவே, என் தா்மங்களையும், பாவங்களையும், உன் கணக்கிலேயே வரவு வைத்துக் கொண்டு, நான் உன்னைச் சந்திக்கும் போது, என்னை மன்னித்து விடு.”
அதற்குக் காணிக்கையாக, இந்த மூன்றாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொள்.
Comments
Post a Comment