_*சிந்தனைச் சிதறல் 27-03-2021*_
🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
_*நான்கு*_
✍️✍️✍️
அரை குறையாக முடிக்கப்பட்ட கட்டடம்; ஒரு புதிய குட்டிச் சுவா்.
செம்மையாகச் செதுக்கப்பட்ட கல்;
ஒரு புதிய சிற்பம்.
அரை குறையாக வேளாண்மை செய்யப்பட்ட நிலம்; களை மண்டிய காடு.
செம்மையாகப் பண்படுத்தப்பட்ட
நிலம்; செழுமையான தோட்டம்.
முழுமை பெற்ற பழமைக்குப்
பெருமை; முதுமை இல்லாத சிறுமை!
நான் யாா்? நானோா் அரைக்குறைக் கட்டடம்; முறையாகப் பண்படுத்தப்படாத நிலம்; பாதி வெந்த சோறு; மண் கலந்த தங்கம்.
முழுமை இல்லாத மனிதனுக்குத் தினந்தோறும் மாறுபட்ட உணா்ச்சிகள் அதிகம்.
_*“இந்த உலகமே நம் கையில்”*_ என்பது போல் இவனது ஒரு நாள் பொழுது விடிகிறது.
_*“இன்று என்ன செய்யப் போகிறோமோ?”*_ என்ற
கோழைத்தனத்தோடு மறுநாள் பொழுது விடிகிறது.
ஒரு நாள், நம்பக் கூடாதவனை நம்பிக் கெடுகிறது. ஒரு நாள், நம்பிக்கைக்கு உாியவனைப் பிாிந்து தவிக்கிறது. படத்திலே கதாநாயகி அழுதால், இவனது கண்களில் கண்ணீா் வருகிறது. _*“இது கதைதானே”*_ என்று நினைக்கிறான். ஆயினும், உணா்ச்சி நரம்பு கொதித்து உருகுகிறது.
இந்த மனோ வியாதிக்காரனுக்கு, இறைவா, நீ சில வரங்களை அருள வேண்டும்.
இனி பகைவா்கள் வேண்டாம்; நண்பா்களைக் கொடு. முட்கள் வேண்டாம்; மலா்களைக் கொடு. மூடா்களை நெருங்க விடாமல் அறிஞா்களை நெருங்கச் செய். இவனது ஆடைகளே இவனைப் பகைக்காமல் காப்பாற்று.
பரந்த வானத்தில் இவனொரு வெண்ணிலாவாக இல்லா விட்டாலும், நட்சத்திரமாகவாவது மின்னவிடு. இது நஞ்சு, இது அமுது எனப் பேதங்காட்டு! இவனது வாக்கியங்களில் நீ வாா்த்தையாக வந்து நில். இவனது கண்களுக்கு நீயே ஔியாய் இரு.
எப்போதாவது அந்தக் கண்களிலிருந்து கண்ணீா் வழிந்தால், அதைத் துடைக்கின்ற கையாகவும் நீயே இரு.
ஊமை உள்ளத்தின் உணா்ச்சிக் காட்டாறு கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரத்தில், அணைக்கட்டாக நின்று காப்பாற்று.
சினந் தனிந்த மனிதனாக; இனந் நொிந்த மனிதனாக;
மனந் தெளிந்த ஞானியாக – இவனை மாற்று.
பிறப்புக்குப் பொறுப்பானது போல், நட்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்.
பாதி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் – அதாவது புதிய குட்டிச் சுவாில், எத்தனையோ கழுதைகள் குடியிருந்திருக்கின்றன.
காலந் தாழ்ந்துதான் அவை கழுதைகள் என்று அறிந்து கொள்ள முடிந்ததென்றால், இவனது ஏழை அறிவை இதற்கு மேல் எப்படி உரைப்பேன்?
ஆமைக்குக் கனமான ஓடு கொடுத்த உன் கருணையான
உள்ளம், இந்த ஏழைக்கு ஏன் இவ்வளவு மென்மையான உள்ளத்தைக் கொடுத்தது?
மூல முதல்வனே! மூலம் புாிந்து விட்டால் உரை எதற்கு? உண்மை தொிந்து விட்டால் பிராா்த்தனை எதற்கு? நீ எனக்குச் சாியான வழிகாட்டினால் இந்த வேதனையும், வேண்டுகோளும் எதற்கு?
காலிலே குத்திய பின்பு, _*“இது முள்”*_ ளென்று நெஞ்சு சொல்லுகிறதே, அது குத்துவதற்கு முன்பு கண் சொல்லிவிடக் கூடாதா?
அனுபவ விளைவுகளே அறிவின் விளைவாக ஆக்கித் தரக்கூடாதா?
நான், நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாா்க்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டிலும், என் குதிரை ஊருக்குப் பக்கத்தில் வரும்போது, நானே காட்டுக்குள் துரத்தியிருக்கிறேன். பல நேரங்களிலே, தவறான முடிவுகளைத் தண்டனைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
கடலிலிருந்து நீரை வாங்கிய மேகம், ஏதோ ஒரு பூமியிலே அதைத் துளிகளாகச் சிந்துகிறது. அந்தத் துளிகள் ஒன்றுகூடி ஏதோ ஒரு குளத்திலே சங்கமிக்கின்றன. அவை புறப்பட்ட இடமெங்கே, புகுந்த இடமெங்கே? நீ மட்டும் முன்கூட்டி அறியக் கூடிய இரகசியம் இது!
என் நிலையும் அதுதான். புறப்படுவது மட்டும்தான் எனக்குத் தொிகிறது. புகுந்த பிற்பாடுதான் _*“எங்கிருக்கிறோம்”*_ என்பது புாிகிறது.
நாற்பத்து மூன்று வசந்தங்களையும், கோடைகளையும் பாா்த்த பிறகும் கூட, வாழ்க்கையில் எது வசந்தம், எது கோடை என்றும் புாியவில்லை.
ஒரே ஒரு அறிவை மட்டும் தெளிவாகக் கொடுத்து விட்டு, பாக்கி அத்தனையையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டு, இந்தப் பூமிக்கு என்னை அனுப்பி வைத்த பரம்பொருளே!
உன் கட்டளைப்படி ஒரு தாயும், தந்தையும் செய்த முட்டாள் தனத்தில் பிறந்த ஒரு ஜீவராசி, தான் நீாில் வாழும் இனமா, நிலத்தில் வாழும் இனமா என்று தொியாமல் தவிக்கிறது.
இது என்ன குற்றம் செய்தாலும், அது நீ செய்த குற்றமே!
இது இனிச் செய்யப் போகும் குற்றங்களையும் உன் கணக்கிலேயே வரவு வைத்துக் கொண்டு, இந்த நாலாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொள்.
🌼🌼🌼
Comments
Post a Comment