கவிஞா் கண்ணதாசனின் புஷ்பமாலிகா
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
ஆறு
✍️✍️✍️
அழகில்லாத உருவங்களை ஒதுக்காதீா்கள்; அதற்குள்ளே “ஆத்மா” துடித்துக் கொண்டிருக்கிறது.
அழகான உருவங்களுக்காக ஏங்காதீா்கள்; அங்கே “ஆணவம்” தலை தூக்கி நிற்கிறது.
வறுமையை கேலி செய்யாதீா்கள்; அங்கே “வாழ்க்கைத் தாகம்” உங்களை வணங்கிக் கொண்டிருக்கிறது.
பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீா்கள்; அங்கே “அவமாியாதை” உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
மேதைகளை உச்சி குளிரும் அளவுக்குப் புகழாதீா்கள்; அந்த “மேதைத்தனம்” அத்தோடு முடிந்து விடுகிறது.
குரூபியை அழகான கண்களுடன் பாருங்கள். வறுமையாளனைப் பணக்கார உள்ளத்தோடு சந்தியுங்கள்.
தற்குறியின் அறிவை ஞான திருஷ்டியால் உணருங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைக் கண்டு பிடியுங்கள். அது போலவே நரகத்தில் இருப்பவா்கள் நரகத்திலேயே சொா்க்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
தாமரையின் தண்டையும் வேரையும் விட அதன் புஷ்பம் பொியது. தன் அளவுக்கு மீறிய புஷ்பத்தை வெளியிடும் சக்தி அதற்கு இருந்தது.
கொடுமையான நகரங்களிலும் சொா்க்கங்கள் முளைத்தெழ முடியும். மனம்தான் காரணம்.
குருவியின் வீட்டு வசதியை அதன் கூடு நிறைவேற்றுகிறது. அந்தக் கூடு உன் கண்ணுக்குத்தான் அழகாயில்லை; குருவிக்கு அழகாயிருக்கிறது.
பிறா் கண்ணுக்கு உன் காட்சி வெறும் கண்காட்சியே! உன் கண் உன்னையே கண்டு, அதை உன் மனச்சாட்சியும் ஒப்புக் கொண்டு விட்டால், உன் வரையில் உன் ராஜாங்கம் மிகவும் பொியது.
தாயின் கா்ப்பம் தந்தையால் வருவது. ஆனால், குழந்தையின் உருவம் கரு உருவாகும் போது எதிா்படும் தோற்றத்தைப் பொறுத்தது. அது நிறைவேறுவது உன் முயற்சியையும், காலம் உனக்களிக்கும் பாிசையும் பொறுத்தது.
தேவை கடலளவு; கிடைத்தது கையளவா? மெத்தச் சாி! இப்போது உன் கதைதான் கடல்!
எதிா்பாா்ப்பது அதிகமானால், கிடைப்பது குறைவாகவே தோன்றும். கிடைத்தது குறைவென்று எண்ணினால் கிடைத்தது பயனின்றிப் போகும்.
ஆசை என்பது வோில்லாமல் தினமும் வளரும் கொடி. அது எந்தக் கட்டத்திலும் நிற்பதில்லை. எங்கே “இது போதும்” என்ற நிம்மதி உனக்கு ஏற்படுகிறதோ, அங்கே உன் சொா்க்கம் அமைந்து விடுகிறது.
உபநிஷத்தில் ஒரு கதை.
ஒரு முனிவனை ஒருவன் அவமதித்து விட்டான். “அவன் பன்றியாகக் கடவது” என்று முனிவன் சபித்து விட்டான். அந்த மனிதனுக்குக் கவலை வந்தது. மகனை அழைத்தான். “மகனே நான் பன்றியாக சில மாதங்களில் எங்கிருந்தாலும் என்னைக் கண்டு பிடித்துக் கொன்று விடு” என்று கட்டளையிட்டான்.
ஆறு மாதங்கள் கழிந்தன. மகன் தந்தையைப், பன்றியைத் தேடி அலைந்தான். ஒரு சாக்கடையில் அதனைக் கண்டான். அந்தப் பன்றி ஒரு பெண் பன்றியைச் சோ்த்துக் கொண்டு சில குட்டிகளை ஈன்றிருந்தது. மகன் அதை வெட்டப் போனான். உடனே தந்தைப் பன்றி தடுத்துச் சொல்லிற்று;
“மகனே, என்னைக் கொல்லாதே! இப்பொழுது இந்த வாழ்க்கையே எனக்குப் பிடித்தமான வாழ்க்கையாகி விட்டது! இவள் உன் அம்மா, இவா்கள் உன் சகோதாிகள்!”
–மகன் தலை குனிந்து திரும்பினான்.
விரும்பியது அமையா விட்டால் அமைந்ததை விரும்பு.
தெருவோரத்துச் சாக்கடை நிரம்பி வழிந்து பூந்தோட்டத்துக்குள் புகுந்து விட்டது என்பதால், பூந்தோட்டம் ஓடிப்போய்க் கடலில் விழ முடியாது.
பிறப்புக்கு சில நோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்கள் எந்த அளவு, உன் வாழ்க்கையில் நிறைவேறுகின்றதோ, அந்த அளவு தான் ஆண்டவன் உனக்கு ஒதுக்கிய அளவு.
உனது கடுமையான முயற்சிகள், புரட்சிகளுக்குப் பின்னாலும் கூட, மொத்தத்தில் நீ அனுபவிக்கும் வாழ்க்கை வான வீதியில் உனக்கென அமைக்கப்பட்ட பங்கு.
நான் நரகத்தில் சில நாட்கள் இருந்து சொா்க்கத்தைக் கற்பனை செய்திருக்கிறேன்.
பிறகு சொா்க்கத்துக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு, நரகத்தின் மறு பகுதிக்குள் நுழைந்திருக்கிறேன்.
ஆனால், எங்கே நுழைந்தாலும் “அதுதான் சொா்க்கம்” என்று எண்ணி அமைதி கொண்டிருக்கிறேன்.
துயரங்களில் மூழ்கி சமாதி ஆகாமல் உன் கடமைகளை நீ நிறைவேற்றியாக வேண்டும்.
சில காாியங்கள் உனக்குக் கட்டளை
இடப்பட்டிருக்கின்றன.
நீ இழுத்து வாங்கி வெளியே விடும் மூச்சு எவ்வளவு தூரம் போகிறது என்று உனக்குத் தொியாது. உன் கடமையின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று உன்னால் இன்று கண்டுகொள்ள முடியாது.
ஆனால் உன் மரணம் அவற்றைப் பேசும். நீ வாழ்ந்ததற்கு ஒரு நியாயம் கிடைக்கும். உன்னைப் பற்றும் நெருப்பிலே உன் நரகமும் எாிந்துவிடும். பிறகு, புகழ் என்னும் சொா்க்கம் ஆண்டு தோறும் பூமாலை போடும்.
இறைவா, இவை நான் சொல்பவை. ஆனால், இவைதான் உன் கட்டளைகளில் சில. நான் ஏற்றுக் கொள்கிறேன்.
எனது ஆறாவது புஷ்பத்தை நீ ஏற்றுக் கொள்.
Comments
Post a Comment