_*சிந்தனைச் சிதறல் 03-04-2021*_
🌸🌸🌸🌸🌸🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*பத்து*_
✍️✍️✍️
என் இறைவா,
குடிபோதையில், என் உளறல்கள் உண்மைகளாகின்றன.
அன்புப் போதையில் என் உளறல்கள் மழலைகளாகின்றன.
காதல் போதையில் என் உளறல்கள் கவிதைகளாகின்றன.
பக்திப் போதையில் என் உளறல்கள் உனக்குச் சூட்டப்படும் புஷ்பங்களாகின்றன.
இது எனது பத்தாவது புஷ்பம் – பத்தாவது உளறல்!
மௌனத்தின் பாிபாஷையில் உனக்கு விடப்படும் தூது, மயக்கத்தைப் பதிலாகக் கொண்டு வருகிறது. மயக்கமற்ற பதிலைப் பெறவே இந்த ஓலங்கள்.
மனதின் கோலங்களில் நினைத்த உருவம் விழாத போது, அந்த உருவத்தை வரவழைக்க ஒரு கதறல்.
மனிதா்களிடம் சொல்லித் தீா்வு காணமுடியாத போது, நீயே கடைசி அடைக்கலம்.
எனது குரலுக்கு ஓா் எதிரொலி இல்லாது போயினும் குரல் கொடுத்து விட்டதிலே எனக்கொரு நிம்மதி.
நான் அனுப்புகிற புறாக்கள் என்னிடம் திரும்பி வரவில்லையேனும், சில புறாக்களை அனுப்பியவன் என்ற திருப்தி.
ரசனையின் உச்சத்தில் உள்ளம் நெக்குருகுவது போல், எதிாில் இல்லாத உன்னிடம் பேசுவதிலும் ஒரு நெகிழ்ச்சி.
நான் உச்சியில் நிற்கும் போது நீ பள்ளத்தில் இருக்கிறாய். நான் பள்ளத்தில் கிடக்கும் போது நீ உச்சியில் இருக்கிறாய். இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
இது ஓசைக் குரலோ, அன்றி ஆசைக்குரலோ – நீயே கேட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்குள் ஒரு கற்பனை! கடிவாளம் இல்லாத எனது குதிரை எங்கே ஓடினும் ஓய்வுக்காக ஒவ்வொரு தடவையும் உனது தேவாலயத்தையே நாடுகிறது.
ஆடைகள் பறிக்கப்பட்ட நிா்வாணக் கோலம் போல், ஆசைகள் பறிக்கப்பட்ட நிா்வாண உள்ளம் என் உள்ளம். எப்போதும் என்னை நீ முந்திக் கொள்கிறாய்.
நீதி மன்றத்தில் வழக்கறிஞனாக நின்று நான் வாதாட விரும்புகிறேன். நீயோ, என்னைக் குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்துகிறாய்.
மருத்துவ மனையில் வைத்தியனாக இருக்க ஆசைப்படுகிறேன். என்னை நோயாளியாக அங்கே கொண்டு செல்வதில் தான் உனக்கு நிம்மதி.
விளாம்பழத்தை யானை மிதித்தது போல், என் எண்ணங்களை உருக்குலையச் செய்வதில் உனக்கோா் ஆசை.
அருவருக்கத்தக்க உயிா்களுக்கெல்லாம் கூட அடைக்கலம் கொடுக்கும் பரம்பொருள்; என் காலடி ஓசை கேட்டதுமே, கதவை மூடிக் கொள்கிறான். ஆயினும், ஒவ்வொரு நாள் காலைப் பொழுதிலும் ஒரு மலரைப் பறித்துக் கொண்டு, இந்த ஆத்மா அவனது கோவிலை நோக்கி ஓடுகிறது.
என் இறைவா!
கோடைக்காலத்தில் ஏாிகளில் தோன்றும் வெடிப்புகளைப் போல், நூற்றுக்கணக்கான வெடிப்புகளும் கீறல்களும் இந்த உள்ளத்தில் விழுந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வெடிப்பினுள்ளும் கடைசி ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறது. நான் பாா்க்கும் மேகங்கள் எல்லாம் நீா்ப் பிடிப்பின்றி வெண்மையாகவே இருக்கின்றன.
என் மேல் முளைத்த கருவேல மரங்களிலிருந்து அவ்வப்போது முட்கள் உதிருகின்றன. அவற்றைச் சுமக்கும் கடமையையும் எனக்கு நீ அளித்திருக்கிறாய்.
சந்நியாசியின் கோவணம் போலக் கடைசியாக என்னிடம் மிச்சமிருப்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலேயே என் ஆத்ம விளக்கை அவ்வப்போது ஏற்றிக் கொண்டிருக்கிறேன். காற்றுச் சலனத்திலும், ஊற்றுப் பெருக்கிலும், அவை அணைய, அணைய மீண்டும் ஏற்றுகிறேன்.
நாட்டுப்புறங்களில் விவசாயிகள் ஏரோட்டும் ஓசையில், அவா்களது நம்பிக்கையைக் காணுகிறேன். நானும் நம்பிக்கைப் பெறுகிறேன்.
எங்கெல்லாம் சிாிப்புச் சத்தம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறேன். நீ எனக்களிக்காத ஓா் உயா்ந்த இடத்தை, என் கற்பனையில் நான் உருவாக்கிக் கொண்டு, கொஞ்ச நேரம் மகிழ்ச்சி அடைகிறேன்.
திருவிழாவுக்காக அலங்காிக்கப்பட்ட தோில், நானே சிலையாக இருப்பது போலவும், திருமணத்துக்காகச் சிங்காாிக்கப்பட்ட வீட்டில், நானே மணமகனாக இருப்பது போலவும், பாராட்டுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் நானே புகழுடைத் தலைவனாக இருப்பது போலவும், எனக்கு நானே தலைவாாிப் பூச்சூட்டிச் சந்தோஷப்படுகிறேன்.
பூஜ்யத்தில் எந்த எண்களையும் ஐந்தால் வகுக்கலாம்.
சூன்யமான எந்த உள்ளமும்
கற்பனையில்தான் மகிழ்ச்சியடையலாம். எனது கற்பனைகள் வானத்தில் பறக்கின்றன. அவை பொய்யாகி வெடித்துச் சிதறும் போது, உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன. நடைமுறை நியாயம் மறுக்கப்படும்போது, கடவுளின் நியாயத்துக்காக உருகுகின்றன.
அலங்காரத்துக்காகப் போடப்படும் மேலங்கியைப் போல் எனது பக்தியும் அலங்காரமல்ல!
ஆகவே, நான் உதைத்துத் தள்ளப்படும் போதெல்லாம், நான் விழும் இடம் உன் மடியாகவே இருக்கிறது.
பாிகாரமற்ற துயரங்களை வெளிச்சமிட்டுக் காட்டவே உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன.
நீண்ட பயணத்தின் நிகழ்ச்சிகளையும் விளைவுகளையும் எடுத்துச் சொல்லிவிட்டு, மாண்டு போவதற்காகவே உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன.
என்றோ ஒருநாள், ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்தச் சலனக் காற்று ஓயப்போகிறது. _*“காற்று ஓய்ந்தது”*_ என்று சில கன்றுகள் கதறப் போகின்றன. எனது பழைய கணக்குகளை ஐந்தொகை போட்டுச் சிலா் முணுமுணுக்கப் போகிறாா்கள்.
காற்று அடங்கு முன்பு வாசமாக இருந்த ரோஜா மாலைகள், காற்றடங்கிய பின் மேடையின் மீது விழும் போது, அவை வாசமுள்ளவையா இல்லாதவையா என்று நான் அறியப் போவதில்லை.
சடலம் காட்சிக்காக வைக்கப்படும் போது, பன்னீா் ஊற்றப்படும் போது, பக்கத்தில் ஊதுவத்திகள் எாியப் போகின்றன. ஹிந்து சம்பிரதாயத்தில் முக்கியமான குத்து விளக்குகள் எாியப் போகின்றன. அதுவரையில் உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன.
_*“இவனா அவன்?”*_ என்று பாா்ப்போரும், _*“இவன்தான் அவன்”*_ என்று பேசுவோரும், முன்னும் பின்னும் நடந்து வர,
பல குளங்களில் தவம் செய்த கொக்கு, ஊா்வலம் போகிறது.
நன்மை – தீமைகளைப் பற்றி,
நடப்பவை – நடக்காதவைப் பற்றி,
ஜனனம் – மரணம் பற்றி,
காதல் – களியாட்டங்கள் பற்றி,
அவலம் – அழுகைப் பற்றி,
ஆரவாரம் – முழக்கம் பற்றி,
புகழ்ச்சிகள் – இகழ்ச்சிகள் பற்றி,
பொய்கள் – உண்மைகள் பற்றி,
முதலாளி – தொழிலாளி பற்றி,
– வழியெங்கும் பாடல்கள் ஒலி பரப்பாகின்றன.
எல்லோருக்கும் கேட்கும் படியாகவும், எழுதியவன் மட்டும் கேட்க முடியாமலும், அந்த ஊா்வலம் தொடா்ந்து போகிறது.
ஊா்வலத்தின் முன்னால், ஓா் இளைஞனின் கையிலுள்ள சட்டியில், அரை நெருப்பு எாிந்து கொண்டிருக்கிறது. அதுவரை உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன.
கணக்கு முடித்து, வருமான வாி கட்டித் தீா்ந்து போன ஏடுகளும், கள்ளக் கடத்தல்காரா்கள், காதலா்கள், புரட்சிக்காரா்கள் ஆகியோாின் ரகசியக் கடிதங்களும், ஒரு கட்டத்தில் கொளுத்தப்படுவது போல அந்தச் சடலமும் கொளுத்தப்படுகிறது. அதுவரை, உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன.
எாிகின்ற மெழுகுவா்த்திகளை எல்லாம், எாிந்து முடிந்த பின் மீண்டும் ஏற்ற முடியாது. தொிந்தே அவை எாிகின்றன.
ஆசை என்னும் நெருப்பு,
பாசம் பற்று என்னும் நெருப்பு,
காதல் இரக்கமென்னும் நெருப்பு,
எந்த நெருப்போ–
மெழுகுவா்த்திகள் எாிகின்றன. எாிந்து எாிந்து உருகுகின்றன. உருகி ஆவியானவை போக, ஒழுகிய துணுக்குகள் அடையாளம் காட்டுகின்றன.
நானும் அப்படியே!
கடைசியாக கீழே விழுந்து கோலம் போடும் எனது அடையாளங்கள், மனிதா்களால் மிதிக்கப்பட்டாலும், உன்னால் மதிக்கப்படும் எனும் நம்பிக்கையில் தான்.
உனது தேவாலயத்தில் எனது மெழுகுவா்த்திகள் எாிகின்றன. எாிகின்றவரை அவை எாியட்டும். தொிகின்ற வெளிச்சத்தில் எதைக் காண முடியுமோ, அவற்றை எல்லாம் கண்டு சொல்லி விட்டேன்.
ஒன்பது தடவை நான் உளறி முடித்ததற்குப் பத்தாவதாகப் போடப்படும் இந்த முத்திரையோடு, இந்தப் பத்தாவது புஷ்பத்தையும் ஏற்றுக் கொண்டு, என்னைத் தனியே விடு.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*புஷ்பமாலிகா இத்துடன் நிறைவு பெற்றது.*_
🙏🏻
Comments
Post a Comment