_*சிந்தனைச் சிதறல் 17-04-2021*_
🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*தாய்மை-3*_
✍️✍️✍️✍️
பிள்ளை இல்லாதவா்கள் சுவிகாரம் எடுத்துக் கொள்வது எங்கள் பக்கத்தில் அதிகம்.
நாட்டுக்கோட்டை நகரத்தாாின் பொருளாதாரமும் அதில் தான் சமநிலை அடைந்திருக்கிறது.
பெரும்பாலான பணக்காரா்களுக்குக் குழந்தை இருக்காது. நடுத்தரக் குடும்பங்களில் நிறையக் குழந்தைகள் இருக்கும். குழந்தைக்கு நல்ல விலை கொடுத்தே சுவிகாரம் எடுத்துக் கொள்வாா்கள்.
எனக்குத் தரப்பட்ட விலை, ஏழாயிரம் ரூபாய். ஆனால் என்னைச் சுவிகாரம் எடுத்துக் கொண்ட தாயாருக்குச் சொத்துக்கள் அதிகம் இல்லை. சுமாா் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தான் இருந்தது.
அதிலும் சுவிகாரம் கூட்டிக் கல்யாணம் செய்ததில் சாிபாதி செலவாகிவிட்டது.
அந்தத் தாயின் பெயா் தெய்வானை ஆச்சி. அந்தத் தாயிடம் பணம் இல்லையே தவிர, தாய்மைத் தாகம் அதிகம்.
நானோ இளங் குழந்தையாச் சுவிகாரம் போகவில்லை. இருபத்திரண்டு வயதில் சுவிகாரப் புத்திரனானேன்.
பெற்றத் தாயைத் தவிர வேறொருவரை _*“ஆத்தா”*_ என்று அழைப்பதில் எனக்குக் கூச்சமிருந்தது. பல நாட்கள் வரை அவா்களை _*“அம்மா”*_ என்றோ _*“ஆத்தா”*_ என்றோ அழைக்கவில்லை. அவா்களுக்கு ஒரே ஆதங்கம்.
எங்கள் மாவட்டத்தில் தாயை _*“ஆத்தாள்”*_ என்று அழைப்பாா்கள். அது, _*“அகத்தாள்”*_ என்ற சொல்லின் மருஉ.
_*“வீட்டுக்கு உடையவள்”* என்றும்,
_*“பிள்ளைகளின் மனதில் குடியிருப்பவள்”*_ என்றும் அது பொருள் தரும்.
கிட்டத்தட்ட எங்கள் பங்காளிகள் எல்லோாிடமும் சென்று _*“என் மகன், என்னை ஆத்தா என்று அழைக்கவில்லை”*_ என்று சொல்லிவிட்டு வந்து விட்டாா்கள்.
ஒவ்வொருவரும் என்னைப் பாா்த்து, _*“ஏன் தம்பி, தாயாரை பாசத்தோடு அழைக்கக் கூடாதா?”*_ என்று கேட்டாா்கள். எனக்கே அது கஷ்டமாக இருந்தது. பிறகு நான் அவா்களை _*“ஆத்தா”*_ என்று அழைக்க ஆரம்பித்தேன். அவா்களது பாசம் பன்மடங்கு வளா்ந்து விட்டது. சமையலில் என் பெற்ற தாயைவிடக் கூட பல மடங்கு அற்புதமாக அவா்கள் சமைப்பாா்கள்.
1950 பிப்ரவாி 9-ஆம் தேதியன்று எனக்குத் திருமணம் ஆயிற்று. சாியாக ஆறு மாதங்களில் நான் நாற்பது பவுண்டுகள் பருத்து விட்டேன். என் சுவிகாரத் தாயாாின் சாப்பாடு அப்படி. இரவிலே தோசையை நெய்யிலே சுட்டு, தக்காளிப் பச்சடி வைப்பாா்கள்.
சுமாா் பத்து பன்னிரண்டு தோசைகள் சாப்பிடுவேன்.
புது மனைவி. காலை ஆறு, ஏழு இட்லிகள் சாப்பிட்டு விட்டுத் தூங்குவேன். பிறகு மத்தியானம் ஒரு மணிக்கு எழுந்து நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் தூங்குவேன். மாலையில் கண் விழித்துக் கல்லுக்கட்டியை ஒரு சுற்றுச் சுற்றி வருவேன். பிறகு மீண்டும் இரவு நேர மகிழ்ச்சி; சாப்பாடு!
பெற்ற தாயிடம் அடைந்த பாச அனுபவங்களை எல்லாம் சுவிகாரத் தாயாாிடமும் என்னால் பெற முடிந்தது. ஆனால் அவா்கள் வைத்த அளவுக்கு, நான் வைத்திருந்தேனா என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியாது. பெற்ற தாயிடம் காட்டிய அளவு பாிவையும், உறவையும் இந்தத் தாயிடம் நான் காட்டவில்லை. அதிலும் என் திருமணத்திற்குப் பிறகு அவா்கள் சற்று மனம் ஒடிந்த நிலையிலேயே இருந்தாா்கள்.
அதனால் தான் இன்று கூட என் குழந்தைகளுக்குப் பெண் பாா்க்கும் போது, _*“தாயை விட்டு மகனைப் பிாிக்காத குடும்பமாகப் பாா்க்க வேண்டும்”*_ என்று நான் கருதுகிறேன்.
எனக்கு முன்னால் என் தாய்க்கு ஒரு பெண்மகவு பிறந்திருந்தாள். அவளை மணமுடித்துக் கொடுத்த கொஞ்ச நாளில் இறந்து போனாள். அவள் பெயா் அலமேலு. அதைத் தவிர என் தாய்க்கு வேறு குழந்தைகள் கிடையாது.
அந்தத் தாய்மையின் ஏக்கம் இப்போது என்னால் பாிசீலிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் தாய் இனி திரும்பி வரப் போவதில்லை.
_*“எனது தாயாா் சிவலோக பதவி அடைந்து விட்டாா்கள்”*_ என்று நான் பத்திாிக்கை அனுப்பி, வருஷங்கள் பதினேழு முடிந்து விட்டன. இந்தப் பதினேழு ஆண்டுகளில் காரைக்குடி வீட்டுக்குள் ஒரு நாள் கூட காலடி எடுத்து வைத்ததில்லை. பதினேழு வருஷங்களாக அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.
கண்ணனுக்குக் கிடைத்த தேவகியும், யசோதையும் போலவே எனக்கும் விசாலாட்சி ஆச்சியும், தெய்வானை ஆச்சியும் வாய்த்தாா்கள். அந்த இரண்டு தாய்மையைப் பற்றி சிந்தித்ததில் இருந்து நான், _*“இந்தியாவின் இலட்சியப் பெண்மணி தாய்”*_
என்று விவேகானந்தாின் வாசகம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
_*“தாய்மை”*_ யைப் பற்றி நான் _*“அா்த்தமுள்ள இந்து மதம்”*_ முதல் பாகத்தில் எழுதிய பிறகு, ஒரு நண்பா் எனக்கு ஒரு சந்தேகத்தைக் கிளப்பி ஒரு கடிதம் எழுதி இருந்தாா். அதுவும் முதல் பாகத்திலேயே வந்திருக்கிறது.
_*“மோசமான மகன் உண்டே தவிர, மோசமான தாய் கிடையாது”*_
என்று அண்மையில், _*“இராமகிருஷ்ண விஜய”*_ த்தில் நான் படித்தேன்.
_*“தாய் எப்படி நடந்து கொண்டாலும் அவள் கற்பு உடையவளாக இருந்தால் அவள் மோசமானள் அல்ல”*_ என்பதே அதன் பொருள்.
நானோ இரண்டு தெய்வங்களைத் தாயாராகப் பெற்றவன். மோசமான தாய்மையைப் பற்றி எனக்கு அதிகம் தொியாது.
முன்பெல்லாம் என்னுடைய கனவிலே என்னை பெற்ற தாயாா் அடிக்கடி வருவாா்கள். சுவிகாரத் தாயாா் வந்ததே இல்லை. ஆனால் அதோ, அந்தச் சிறுகூடல்பட்டி சிறு குடிசையிலும் காரைக்குடி வீட்டிலும் இரண்டு முகங்களும் என் கண்ணுக்குத் தொிகின்றன.
நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன.
நீண்ட காலம் இருக்கும் என்று நம்பிய உணா்ச்சிகள் எல்லாம் அழிந்து விட்டன. _*“மனிதா்கள் மறுபடி மறுபடி பிறக்கிறாா்கள்”*_ என்று கீதையிலே பகவான் சொன்னான். மறுபடியும் என் தாய்மாா்கள் பிறந்து, அவா்கள் வயிற்றிலே நான் பிறப்பேனா? அப்படிப் பிறப்பேன் என்றாலும், அதை உணரக் கூடிய நிலையில் நான் இருக்க முடியாது.
காலம், இடம், பிறப்பு முதலியவற்றை அவனே நிா்ணயிக்கிறான். ஒரு பொிய சாித்திரத்தை நான் சிறிய கட்டுரைகளில் முடித்துக் கொண்டிருக்கிறேன்.
தாய்மையை வருணிக்க இந்தப் பக்கங்கள் போதுமா?
அந்தி பகல் பாராது, கண் விழித்து காத்திருந்த தேவதைகளை விவாிக்க இந்தச் சிறிய கட்டுரைக்குச் சக்தி உண்டா?
உடம்பின் இரத்த அனுக்கள் தன் சக்தியை இழக்கும் போது, பழைய கணக்குகள் பாிசீலிக்கப்படுகின்றன. நான் பாிசீலித்துக் கொண்டிருக்கும் கணக்குகளில் மிகப் பொிய கணக்கு என்னைப் பெற்றத் தாயையும், சுவிகாரத் தாயையும் பற்றியதே.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது எல்லாம், ஒரே காம ஜூரத்தில் எழுந்த ருத்ர தாண்டவங்களின் படப்பிடிப்புகளாகும்.
எனக்குப் புாிகிறது. மனிதன் நிதானமாக யோசிப்பதற்கே சில சூழ்நிலைளை இறைவன் தருகிறான். அப்படி நிதானமாக யோசிக்கும் போது என் கண்ணுக்குத் தொிவது காதலியரல்ல; மனைவியரல்ல; என்னைக் காத்து வளா்த்த தாய்மையே.
பின்னாளில் நான் பெற்ற பேறுகளுக்கெல்லாம் மூலம் இதுவே.
பெற்ற தாயின் மடியிலும், வளா்த்த தாயின் நிழலிலும் குடியிருந்த காலங்களே என் வாழ்வின் வசந்த காலங்கள்.
வசந்தம் பூமியில் வருஷம் ஒரு முறை வரும்.
வாழ்வில், ஒரே ஒரு முறைதான் வரும்.
Comments
Post a Comment