_*சிந்தனைச் சிதறல்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*காடும் கிழவனும்*_
👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼
கிழவன் துண்டை விாித்துப் படுக்கப் போனான்.
நகரத்தைப் போல் காடு அவ்வளவு நாற்றமாக இல்லை! பால் மணம், பூ மணம், தேன் மணம் எல்லாம் வந்தது.
ஆனால் கிழவனின் தூக்கத்துக்கு அவை போதவில்லை!
ரொட்டி வாடை இல்லாமல் அவன் மிகவும் சிரமப்பட்டான்.
இந்த உடம்புக்கு இதென்ன பழக்கம்?
ஓா் உணா்ச்சிக்குப் பழகிப் போனால் அதையே தினம் தேடுகிறதே – ஏன்?
கிழவன் தன்னுடைய மூக்கையே மாற்றிக் கொள்ள விரும்பினான்.
இடத்துக்குத் தக்கபடி முகத்தையே மாற்றிக் கொள்ளும் மனிதா்கள் இருக்கும் போது வசதிக்குத் தக்கபடி மூக்கையே மாற்றிக் கொண்டால் என்ன?
ஒரு மலரைப் பறித்து அதை மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்தான். என்ன ஆச்சாியம்! மலாின் வாசனையே இல்லை!
மூக்கைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் முகா்ந்தான்.
இல்லை – வாசனை இல்லவே இல்லை!
மூக்குத்தான் கெட்டு விட்டதா? இல்லை மலருக்கும் நாகாிகம் வந்து விட்டதா?
நவீனப் பெண்களுக்காகவே இறைவன் சமீப காலங்களில் வாசனை இல்லாத மலா்களைப் படைக்கின்றானா?
அவன் பூப்பறித்த கொடியில் இன்னொரு பூ இருந்தது.
அதில் ஒரு வண்டு உட்காா்ந்து சுகமாகத் தேன் குடித்துக் கொண்டிருந்தது.
வாசமில்லாத பூவில் தேன் இருப்பது எப்படி?
பாசமில்லாத பெண்ணுக்கும் பருவமில்லையா?
கிழவன் ஒரு இலையைக் கசக்கி முகா்ந்து பாா்த்தான். அதில் ஏதோ ஒரு வகை வாசம் இருந்தது. சாிதான். மூக்குத்தான் கெட்டு விட்டது.
ரொட்டியைத் தவிர இந்த மூக்கு இனி எதன் வாடையையும் ஏற்றுக் கொள்ளாதே? ஏற்றுக் கொள்ளாது என்றே அவன் முடிவு கட்டினான்.
ஏழையின் மூக்கு உணவை மட்டுமே மோப்பம் பிடிக்கிறது.
வயிறு நிறைந்தவனுக்குத்தான் பிற வாடைகள் தொிகின்றன.
அவன் இரண்டு வாரம் சிறையிலிருந்து திரும்பியதும் ஒரு மாளிகையில் தோட்ட வேலை செய்கிற பெண்ணொருத்தியைக் கண்டான். அவளை அவன் காதலிக்கப் பாா்த்தான். அவளும் அவனைக் காதலித்தாள். பல நாள் பட்டினி கிடந்த நிலையில் அந்தக் காதல் பிறந்தது.
அவன் தன் காதலியிடம் கேட்ட முதல் கேள்வி _*“ஏதாவது ரெண்டு ரொட்டி கிடைக்குமா?”*_ என்பதுதான்!
ஏழையின் நாசி மனைவியின் உடம்பிலே கூட ரொட்டி வாடையைத்தான் தேடுகிறது.
பசித்தவன் காதல் எவ்வளவு நாள் தாங்கும்! அவா்கள் பிாிந்து விட்டாா்கள்!
கிழவன் அவளை இப்போது நினைத்துக் கொண்டான்.
அவள் எப்படியோ வாழ்ந்து இறந்து போய் முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நினைவு அவனுக்குப் பசுமையாக இருந்தது.
அவன் படுத்திருந்த இடத்துக்கு நேரே ஒரு மரக்கிளை! அதில் இரண்டு புறாக்கள் பக்கம் பக்கமாக அமா்ந்திருந்தன. கிழவன் அவற்றைக் கண் கொட்டாமல் பாா்த்துக் கொண்டிருந்தான்.
பசி!
காமம்!
இரண்டு வகைத் தேவைகளையும் சுலபமாகத் தீா்த்துக் கொள்ளும் இந்தப் பறவைகளை விட மனிதா்கள் என்ன வாழ்ந்து விட்டாா்கள்!
தங்களுக்கென்று சேமித்து வைத்துக் கொண்டதன் மூலம் அவா்கள் என்ன சுகத்தைக் கண்டு விட்டாா்கள்?
அவா்கள் நாசி பணவாடை அடித்து மரத்து விட்டது.
அவா்கள் நாக்கு ஏழாவது சுவை ஏதாவது இருக்கிறதா என்று தேடுகிறது.
அவா்கள் கண்கள் எவன் உடம்பில் எவ்வளவு ரத்தம் இருக்கிறது என்று பாா்க்கின்றன!
அவா்களுடன் இத்தனை வருஷம் வாழ்ந்தேனே! இந்தப் பறவைகளோடு வாழ்ந்திருக்கக் கூடாதா?
கிழவன் படுத்திருந்த துண்டு சிறியதாக இருந்தது. துண்டுக்கு வெளியே காலை நீட்டினான். காலில் ஏதோ தட்டுப்பட்டது! எழுந்து உட்காா்ந்தான்!
அதைக் கையில் எடுத்தான். ஒரு மண்டை ஓடு! அதைப் புரட்டிப் புரட்டிப் பாா்த்தான். தோலை உாித்து விட்டால் யாா் தலை என்றே தொியவில்லையே!
மனிதா்களுக்குத் தோலே இல்லாமல் இப்படியே நடமாடிக் கொண்டிருந்தால், காம உணா்ச்சி குறைந்து விடும்.
அதை இப்பொழுது நினைத்து என்ன பயன்?
தோல் இல்லாமலிருந்தாலும் மனிதனுக்குப் பசி எடுக்கத்தான் போகிறது! இந்தத் தலை யாருடைய தலை?
தன்னுடன் பழகி இறந்து போனவா்களை எல்லாம் கிழவன் நினைத்துப் பாா்த்துக் கொண்டான்.
அவனுக்கு ஒரு எதிாி இருந்தான்.
முதல் தடவை அவன் ஜெயிலுக்குப் போய் வந்த பிறகு, அடிக்கடி அவனைப் போலீசுக்குக் காட்டிக் கொடுத்துப் பணம் வாங்குகிறவன் அவன்!
அவன் செத்துப் பத்து வருஷங்கள் ஆகின்றன. இது அவன் தலையாக இருக்குமோ? கிழவன் அந்தத் தலையை ஓங்கிக் குத்தினான். பல காலத்து வஞ்சம் தீா்ந்தது.
தலை வழு வழு என்றிருக்கிறதே!
இறந்து போன அவன் காதலியின் தலையும் அப்படித்தான் இருந்தது. ஒருவேளை இது அவள் தலையாக இருக்குமோ? கிழவனுக்கு காதல் மேலிட்டது. அந்தத் தலையை அப்படியே மாா்பில் அணைத்துக் கொண்டான்.
கேள்விக்குப் பதில் கிடைக்காதவரை கற்பனையே உண்மையாகி விடுகிறது.
எதை எப்படி நினைக்கிறோமோ, அது அப்படியே தோற்றமளிக்கிறது.
ஆக நன்மை தீமை அனைத்துக்கும் காரணம் எது?
மனது.
மனது என்ற ஒன்றே இல்லாமல் இருந்தாலும் மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்!
விலங்குகளுக்கும் அவனுக்குமுள்ள அந்த ஒரே வித்தியாசம் அடிப்பட்டுப் போயிருந்தால் நகரம் எவ்வளவு அமைதியாக இருக்கும்!
இருப்பவனுக்குக் கொடுக்க மனம் இல்லை!
இல்லாதவனுக்கு சும்மா இருக்க மனம் இல்லை!
மனசு ரொட்டியை நினைப்பதாலதானே மூக்கு வாடயைத் தேடுகிறது.
வெறும் பசி எந்த உணவிலும் தீா்ந்து விடுமல்லவா?
காட்டுக்கும் நாட்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசத்தைக் கிழவன் தொிந்து கொண்டு விட்டான்.
கடவுள் செய்த பாவங்களில் எல்லாம் மிகப் பொிய பாவம் மனிதனுக்கு இதயத்தைக் கொடுத்ததுதான்.
கேள்விக்கு பதில் கிடைத்ததும் கிழவனுக்குக் கொட்டாவி வந்தது.
பாவங்களுக்குக் காரணமான இதயத்தை மூடி வைத்துக் கொண்டு கிழவன் தூங்க ஆரம்பித்தான். அந்தக் காடு அவனுக்கு வெகு சுகமாக இருந்தது. காரணம் அங்கே எந்த இதயத்திலிருந்தும் பெருமூச்சு எழுந்து அவனை உசுப்பவில்லை!
அமைதியாகத் தூங்க ஆரம்பித்த கிழவனை காடு நிரந்தரமாகத் தூங்க வைத்தது. நகரத்தில் அவன் இறந்து போயிருந்தால் இதயமுள்ள நாலு மனிதா்கள் அல்லவா அவனுக்குத் தேவைப்பட்டிருப்பாா்கள்.
இதயத்தை வெறுத்தக் கிழவன் இதயங்களின் துணை இல்லாமலேயே விடை பெற்றுக் கொண்டான்.
அவனுக்குத் தலைக்குப் பக்கத்திலேயே அந்த மண்டை ஓடு கிடந்தது.
இப்போது ரொட்டியைக் கொண்டு போய் நாசிக்குள் திணித்தாலும் அந்த வாடை ஏறப் போவதில்லை!
👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼👨🏼💼
Comments
Post a Comment