82 வயதில் 25 -வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவருக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு மயிலாடுதுறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
![](https://i0.wp.com/64.media.tumblr.com/08d006d8298182899ea0a3d83b1ac4fc/437b8d4765a4bb58-e7/s640x960/48c012785ddd7050b92335ecec4072064ff6af37.jpg?ssl=1)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்குக் கல்வியின்மீது அதீத ஈடுபாடு. அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964 -முதல் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும்பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிப் படிப்புகள் படித்துவருகிறார்.
இதுவரை பி.ஏ.,எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்குப்பிறகு 12பட்டப் படிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்குத் திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் குருமூர்த்தி தனது25-வது பட்டப் படிப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பைப் படிப்பதற்கு முடிவு செய்தார். அதற்காக மயிலாடுதுறையில் புதிதாகத் திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களைப் பெறுவதற்கு இளைஞரைப் போல உற்சாகத்துடன் அவர் வந்தபோது, அவரைப் பாராட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி கௌரவித்தார்.
இதுபற்றிப் பேசிய குருமூர்த்தி ,
“படிப்பதற்காக நான் செலவு செய்யும் தொகையைச் செலவாக நினைத்ததே இல்லை. எனது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாகவே இந்தப் படிப்புகள் அமைந்துள்ளன. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. வாட்ஸ் அப், பேஸ்புக் என இன்றைய இளைய தலைமுறையினர் அதில் மூழ்கி நேரத்தை வீணடித்து வருகின்றனர். வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாகக் கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது. இந்தப் படிப்புகள் என்னை உற்சாகமூட்டி என்றும் இளைஞனாக, மாணவனாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே இளைய தலைமுறையினர் கல்வி கற்க அவர்களது நேரத்தைச் செலவிட வேண்டும். அப்படிப் பெற்ற கல்வி மற்றவர்களுக்கும் உதவிடச் செய்ய வேண்டும்” என்றார்.
Comments
Post a Comment