*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*நவம்பர் 20 – சர்வதேச குழந்தைகள் தினம் International Child Rights Day*
ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது.
உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது.
நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் போன்ற இந்தியாவின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரப்போகின்றன.
யுனிசெஃப் முதல் முறையாக 14 வயதான குழந்தை நட்சத்திரம் மில்லி பாபி பிரவுனை அதன் நல்லெண்ண தூதராக நியமித்திருக்கிறது.
இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. அப்படி உலக நாடுகளில் எல்லாம் குழந்தைகள் தினம் என்று..? எதற்காக, எப்படிக் கொண்டாடப்படுகிறது, என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்று சற்று ஆராய்ந்தேன். என் ஆராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு:
இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் என்றாலே அனைவரும் நினைவலை ரயிலேறி பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுகிறோம். அன்று மட்டும் சீருடை தவிர்த்து கலர் உடை அணியலாம், பள்ளியில் இனிப்பு வழங்கப்படும். நேரு மாமா புகழ் பாடும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும், சில பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆடிப் பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். பெரிதாக வகுப்புகள் நடக்காது, வாழ்த்து ஒலிகளால் அன்றைய தினம் முழுவதும் நிறைந்திருக்கும், நண்பர்களுக்குள் யார் முதலில் வாழ்த்துவது என்ற போட்டி நடக்கும். இப்படிப் பல்வேறு நினைவுகளுடன், அனைவரின் உள்ளே இருக்கும் குழந்தைத் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இன்று `ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே’ என்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்தியுடன், இந்த நாள் வழக்கமாகக் கடந்துவிடுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள்கூட அந்த நாளைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. காரணம், அவர்கள் வாழ்க்கைக்குள் யூடியூப் வீடியோக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், மொபைல் கேம் இப்படி பலவிஷயங்கள் நிறைந்திருக்கின்றன. சில்ட்ரன்ஸ் டே அளிக்கும் சிறிய சந்தோஷங்களை எல்லாம் அவர்கள் பெரிதாய் ரசிப்பதில்லை.
பல்கேரியா: ஜூன் மாதம் 1-ம் தேதி இங்கு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகக் குழந்தைகள் தினத்தன்று வாகனங்களில் விளக்குகளைப் பகலிலும் எரியவிட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது இங்கு வழக்கம்.
டொக்லியு தீவுகள்: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, இங்கு குழந்தைகள் வெள்ளை உடை அணிவது வழக்கம். மற்றொரு சிறப்பம்சமாக அன்று முழுவதும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சேவை செய்து மகிழ்கின்றனர். “அப்பா அதை எடுங்க, அம்மா இதைப் பிடிங்க” என்று பெற்றோரை வேலை வாங்குவது குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.
சிலி: பொம்மைகள் வாங்குவதற்கு என்றே ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்? சிலியில் குழந்தைகள் தினத்தன்று குட்டீஸ் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர். இங்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம்.
கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
எகிப்து: நவம்பர் 20, எகிப்தில் இது பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது, தெருக்களில் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே நாட்டுப்புற நடனங்கள், காலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜப்பான்: இதிலும் ஜப்பானியர்கள் வித்தியாசம்தான். ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3, பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.
மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் எல்லாம் ஒரே விளையாட்டு மயமாகவே இருக்கும். மேலும் மெக்ஸிகோவின் சிறப்பு குழந்தைகள் தினத்தன்று மிக அடர்த்தியான வண்ணங்களில் குழந்தைகள் ஆடை அணிவது ஆகும். வசந்த காலத்தை, புது தொடக்கத்தை அனுசரிப்பதற்காக இது செய்யப்படுகிறது.
பராகுவே: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, ‘அகோஸ்டா நு’ (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 – 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பெரு: இங்குக் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது வர்த்தக நிறுவனங்கள். அனைத்துக் கடைகளிலும் நமது ஆடி மாதம்போல சிறப்புச் சலுகைகளும் தள்ளுபடி விலைகளும் இன்று கொடுக்கப்படுகிறது. பெரு நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.
Comments
Post a Comment