*முடியும்… முடியும்…* ’ *என்றே சிந்தியுங்கள்*! –
நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் ஒரு துளியே! எனவே, நாம் எதைத் தீர்மானமாக விரும்புகிறோமோ அதைப் பிரபஞ்ச மனம் பெற்றுத் தந்து விடுகிறது என்பது உண்மை.
எனவே, எப்போதும் மகிழ்ச்சியை, நல்லதை, வெற்றியை, ஆரோக்கியத்தையே உறுதியாகச் சிந்தித்து ‘முடியும்’ ‘முடியும்’ என்று தீர்மான முடிவுடன் வாழ ஆரம்பித்தால் போதும். நம் வாழ்க்கையில் அற்புதங்கள் அன்றாடம் நிகழ ஆரம்பிக்கும். காரணம், மனம் எதை உறுதியாக எண்ணுகிறதோ அதைப் பல மடங்கு அதிகமாகப் பிடித்துக் கொண்டு வந்து நமக்குத் தந்து விடுகிறது!
எந்த ஒரு மனிதனும் மூச்சு விடுவதால் வாழ்வதில்லை. அவன் துணிந்து செய்துள்ள நற்செயல்களால் தான் வாழ விரும்புகிறான். எல்லோரிடமும் ஏதோ ஒரு கனவோ அல்லது கடமையோ இருக்கிறது. அதை நிறைவேற்ற முடியும் என்ற எழுச்சியூட்டும் நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ விரும்புகிறான். எந்த ஒரு மனிதனும், ‘என்னிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதனால் வாழ விரும்புகிறேன்’ என்று சொல்வதில்லை. ‘எனக்கு ஒரு பெரிய கடமை, இலட்சியம், பொறுப்பு போன்றவை உள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியும்! என்று நம்புகிறேன். அதற்காகவே இவ்வுலகில் உயிர் வாழ்கிறேன்’ என்பான்.
சோம்பேறியும்கூட, ‘நாளை எனக்கு வேலை கிடைக்கும். சோறு கிடைக்கும். எனவே உயிர் வாழ்கிறேன்’ என்பான்.
இப்படி எல்லோரிடமும் ஏதோ ஒரு நம்பிக்கையான எண்ணம் இருப்பதால்தான் வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகளைக் கண்டு கலங்காமல் தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் அவன் நம்பிக்கையுடன் எதைச் சிந்தித்தானோ அதுவாகவே உருவாகி விடுகிறான்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு கண்டுபிடிப்பு வீதம் 1,092 கண்டுபிடிப்புகளுக்குத் தொடர்ந்து கண்டுபிடிப்பு உரிமை பெற்ற ஒரே விஞ்ஞானி எடிசன்தான். அவரும் சாதாரண மனிதர்தான். மூன்று மாதங்கள் கூட பள்ளிக்குச் செல்லாதவர் எடிசன். ‘விநோதமான பெரிய தலை உனக்கு. உன் மண்டையில் எதுவும் ஏறாது. இனி பள்ளிக்கு வராதே’ என்று விரட்டி அடிக்கப்பட்டவர்தான் எடிசன். அவருடைய உறுதியான, நம்பிக்கையான சிந்தனைகளால் எடிசன் என்ற மாபெரும் கண்டுபிடிப்பாளர் உருவானார். தோல்வி, பயம் போன்றவை தன் மனதில் கூடுகட்டி வசிக்காமல் பார்த்துக் கொண்டவர். அதனால்தான் தன் 59 ஆவது வயதில் அவரது ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரிந்தபோது, தன் மகனைக் கூப்பிட்டு ‘உன் அம்மாவை அழைத்து வா. இதைப் போன்று நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதை அவள் பார்த்திருக்கவே மாட்டாள்’ என்று சொன்னார்.
காரணம் ‘தன் மனதில் தோல்வி மனப்பான்மை இடம் பிடிக்கக் கூடாது’ என்பதற்காகவே எடிசன் இவ்வளவு தூரம் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மதர் தெரஸா என்றதும், ‘ஏழைகளுக்கு உதவுவது’ என்ற அவரின் தீர்மான எண்ணம் தான் நமக்குத் தெரிகிறது.
நாம் எதை உறுதியாக எண்ணுகிறோமோ அதன் படியே நமது வாழ்க்கையும் அமைகிறது. இதனால்தான் கால்கள் இல்லாதவரால் செயற்கைக் கால்களின் உதவியால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடிகிறது. ‘எவரெஸ்ட்டை அடைய முடியும்’ என்று சிந்தித்தபடியே ஊனமுற்ற மனிதரும் அடைந்து விடுகிறார்.
ஆபாசமில்லாமல், வன்முறையில்லாமல், விறுவிறுப்பான நாவல்களை எழுதுவேன் என்று ராஜேஷ்குமார் எடுத்துக் கொண்ட உறுதி இன்றுவரை அவரை 1,000 நாவல்களுக்கு மேலும் கற்பனை வறட்சி இன்றி விறுவிறுப்பாக எழுத வைத்து வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் செல்கிறது. ராஜேஷ்குமார், ‘ஆபாசமில்லாமல், அதே நேரத்தில் சுவையாக எழுதுவேன்’ என்பதில் உறுதியாக இருப்பதால் அவரது ஆழ்மனம் குழப்பமின்றி பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டு அவர் விரும்பியபடியே எழுத வைத்து வருகிறது.
‘முடியும்’ என்று நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், நீங்கள் எண்ணும் எண்ணங்களை, அதற்கான வழிகளை ஆழ்மனம் பிரபஞ்ச மனத்திடமிருந்து பெற்றுத் தந்து விடும். இதற்காக நீங்கள் ஒருமுகச் சிந்தனையுடன் சிந்திக்க வேண்டும் என்பதே முக்கியம்.
சார்லஸ் பிளான்டின் நயாகரா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதன் மேல் நடக்க முடியும் என்று எண்ணினார். நம்பிக்கையுடன் தரையில்தான் பயிற்சி செய்தார். பிறகு நயாகரா ஆற்றின் குறுக்கே கயிற்றில் நடந்து காட்டினார். ‘முடியும்’ என்ற வலிமையான சிந்தனையின் சாதனை தான் இது.
எனவே, ‘என்னால் முடியும். என்னால் முடியும்’ என்று சொல்லி நம்பிக்கையுடன் உங்கள் இலட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி ‘என்னால் முடியும், என்னால் முடியும்’ என்று நம்பிக்கையுடன் சிந்திக்கும்போது பிரபஞ்ச மனதுடன் தொடர்பு ஏற்பட்டு மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்து வெற்றியும் பெற்று விடுவீர்கள்.
எனவே, எது ஒன்றைச் சிந்தித்தாலும், அறிவுடன் ஆழ்ந்து சிந்தித்து, அது ‘கிடைக்கும்’, ‘முடியும்’ என்று நம்பிக்கையுடன் சிந்தியுங்கள். பிறகு உறுதியுடன் செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே!
நன்றி….
கற்போம்… கற்பிப்போம்….!
நல்லதே நினைப்போம்…. நல்லதே நடக்கட்டும்!
Comments
Post a Comment